எழுக தமிழ் நிகழ்விற்கு தமிழீழ விடுதலை இயக்கம் ஆதரவு

by Staff Writer 14-09-2019 | 4:46 PM
Colombo (News 1st) தமிழ் மக்கள் பேரவையினால் எதிர்வரும் திங்கட்கிழமை (16) யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'எழுக தமிழ்' நிகழ்விற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) ஆதரவு தெரிவித்துள்ளது. எழுக தமிழ் நிகழ்ச்சி, கட்சி வேறுபாடுகளைக் கடந்து விடுதலையை நேசிக்கும் அனைத்து தமிழ் நெஞ்சங்களையும் ஒன்றுதிரட்டி உலகறிய அபிலாஷைகளை உரத்துக்கூறும் உன்னத நாள் என தமிழீழ விடுதலை இயக்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் சிங்கள தலைமைத்துவங்கள் தமது நிகழ்ச்சி நிரலை சாதுரியமாக முன்னெடுத்து வந்திருக்கின்ற நிலையில், தமிழர் தரப்பின் தலைமை சமரச அரசியல் செய்து சரணாகதி முடிவினை நோக்கி தமிழ் இனத்தை தள்ளிச் செல்ல முனைந்து நிற்பதாக அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எழுக தமிழின் உன்னத நோக்கோடு தமது கட்சியும் இணைந்து நிற்பதாக தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, PLOTE எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எழுக தமிழ் நிகழ்வின் நிலைப்பாடு தொடர்பில் இதுவரை எதுவித முடிவும் எடுக்கவில்லை என அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டு யாழ். முற்றவெளியில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வில் PLOTE கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் நேற்று வினவியபோது, தமது கட்சியின் தீர்மானத்தை தலைவர் அறிவிப்பார் என கூறினார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகியதையடுத்து, தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.