by Bella Dalima 14-09-2019 | 5:33 PM
சவுதி அரேபியாவின் அரம்கோ (Aramco) பெட்ரோல் உற்பத்தி நிறுவனத்தின் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியுள்ளது.
அரம்கோ பெட்ரோல் உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமாக நாடு முழுவதும் பல்வேறு சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், தலைநகர் ரியாத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புக்யாக் என்ற இடத்தில் அப்கைக் என்னும் சுத்திகரிப்பு ஆலையின் மீது இன்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு சுமார் 70 இலட்சம் பெட்ரோலிய கச்சா எண்ணையை சுத்திகரிக்கும் அந்த தொழிற்சாலையின் பெரும்பகுதி தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது.
இதேபோல், குர்அய்ஸ் என்ற பகுதியில் உள்ள அரம்கோ நிறுவனத்தின் பெட்ரோல் கிணறு மீதும் ஆளில்லா விமானம் மூலம் இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் பெட்ரோல் கிணற்றின் ஒருபகுதி தீப்பிடித்து எரிந்து, பின்னர் அணைக்கப்பட்டதாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலுக்கு எவரும் பொறுப்பேற்காத நிலையில், அண்டைநாடாக இருந்து பகை நாடாக மாறிய ஏமன் தரப்பில் இருந்து ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அரம்கோ நிறுவனம் உலகில் அதிக வருமானம் பெறும் நிறுவனங்களில் 6 ஆவது இடத்தில் உள்ளதுடன், இந்நிறுவனத்தில் சுமார் 65,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த ஆண்டில் இந்நிறுவனம் பெற்ற மொத்த வருமானம் 355.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.