ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இருவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இருவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

14 Sep, 2019 | 9:15 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் இருவரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தேசிய பத்திரிகைகள் பெரும்பாலானவற்றில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளின் பிரகாரம், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களான அஜித் பி.பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோரது கட்சி உறுப்புரிமை இரத்து செய்ய ஐக்கிய தேசியக் கட்சியின் ஒழுக்காற்று குழு தீர்மானித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒழுக்காற்றுக் குழுவின் தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கையளித்ததன் பின்னர் அது தொடர்பில் நிரந்தர தீர்மானம் எடுக்கப்படும் என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சில சமூக வலைத்தளங்களில் இது தொடர்பில் தகவல் பதிவாகியுள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றுமொரு அமைச்சர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, அமைச்சர் கபீர் ஹஷீம் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படும் தகவல்கள் குறித்து இன்று மாவனல்லயில் அவர் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.

பதவிகள் எனக்கு தரப்படுவன அல்ல. அனைத்தும் இங்கிருக்கின்ற கேகாலை மக்களுக்கு கொடுக்கப்பட்டவை. நான் இந்த மாவட்டத்தில் இருக்கின்ற ஒரே அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர். அதை பலவந்தமாக எடுக்க வேண்டும் என்றால் மக்களிடத்தில் இருந்து அதனை பெற வேண்டும். நான் இந்த மக்களுக்காக இருக்கிறேன்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்