by Staff Writer 14-09-2019 | 3:44 PM
Colombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்காக நேற்று (13) பிற்பகல் வரை சுமார் 1300 தபால் மூல விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பிரதித் தேர்தல் ஆணையாளர் கே.யூ.சந்திரலால் தெரிவித்தார்.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கு அரச உத்தியோகஸ்தர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறும் செயற்பாடு நேற்று நள்ளிரவுடன் நிறைவு பெற்றது.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவை காலி மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதித் தேர்தல் ஆணையாளர் கே.யூ.சந்திரலால் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தேர்தலுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அடிப்படை ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தந்த பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கு இது தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்தன தெரிவித்தார்.
பதில் பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்னவின் உத்தரவின் பேரில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.