வேற்று கிரகத்தில் மனிதன் குடியேறும் சாத்தியம்

பூமியைப் போன்ற மற்றொரு கிரகத்தில் நீர்: வேற்று கிரகத்தில் மனிதன் குடியேறும் சாத்தியம்

by Bella Dalima 13-09-2019 | 5:23 PM
Colombo (News 1st) பூமியைப் போன்று தட்பவெப்ப நிலையைக் கொண்ட மற்றொரு கிரகமான K2-18b-இல் நீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 110 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் K2-18b என்ற கிரகம், பூமியைப் போல் 8 மடங்கு பெரிதானது. இதுவரை கண்டறியப்பட்ட கிரகங்களிலேயே உயிரினங்கள் வசிப்பதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலையைக் கொண்டுள்ள, பூமி அல்லாத ஒரேயொரு கிரகம் இதுவாகும். K2-18 என்ற நட்சத்திரத்தைச் சுற்றி வரும் அந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், மற்றும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் விண்கல தொலைநோக்கிகள் கண்டறிந்துள்ளன. அந்த நீரும் திரவ வடிவில் இருப்பதற்குத் தகுந்த தொலைவில் தனது நட்சத்திரத்தை K2-18b கிரகம் சுற்றி வருகிறது. அந்த வகையில், மனிதர்கள் வசிப்பதற்குத் தேவையான திரவ நிலை நீரைக் கொண்டிருக்கக் கூடிய, பூமி அல்லாத ஒரே கிரகம் K2-18b என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மனிதர்களை வேற்று கிரகத்தில் குடியேற்றுவதற்கான ஆய்வில், இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும் என Nature Astronomy அறிவியல் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளது .