நெருக்கமான சிலரை மாத்திரம் அலரி மாளிகைக்கு அழைத்த பிரதமர்

by Staff Writer 13-09-2019 | 7:34 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தன்னுடன் நெருக்கமான சிலரை அலரி மாளிகைக்கு அழைத்து நேற்றைய தினம் (12) கலந்துரையாடியுள்ளார். இராஜகிரியவில் விவசாய கட்டடமொன்றை வாடகைக்கு பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பிரதமர் நேற்று அழைக்கப்பட்டிருந்தார். எனினும், மன்னாருக்கு செல்லவுள்ளதால் ஆணைக்குழுவில் ஆஜராக முடியாது என பிரதமர் அறிவித்திருந்தார். நேற்றைய தினம் மன்னாருக்கு செல்வதற்கு முன்னர், களனி மற்றும் பியகம ஆகிய பகுதிகளிலுள்ள அவருக்கு நெருக்கமானவர்களை அலரி மாளிகைக்கு அழைத்து கலந்துரையாடிய சில விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில், கட்சி அதன் தலைமைத்துவத்தில் ஸ்தாபிக்கப்பட்ட கூட்டமைப்பு ஆகியவற்றை வெற்றிகொள்வது தன்னுடைய பொறுப்பு எனவும், அவ்வாறு வெற்றி பெறாவிடின் தாம் கட்சியில் இருந்து வௌியேறுவதில் சிக்கல் இல்லை எனவும் ரணில் விக்ரமசிங்க நேற்றைய கலந்துரையாடலில் தெரிவித்ததாக பத்திரிகை செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. 70 வயது வரை அரசியலில் பதவி வகிக்கும் தனக்கு அரசியலில் இருந்து ஓய்வுபெறுவது கடினமல்ல என ரணில் விக்ரமசிங்க இதன்போது கூறியுள்ளார்.