கஞ்சிப்பானை இம்ரானுக்கு கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு சென்ற அறுவருக்கு விளக்கமறியல்

by Staff Writer 13-09-2019 | 4:13 PM
Colombo (News 1st) பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக்குழுவின் தலைவரான கஞ்சிப்பானை இம்ரானுக்கு கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு சென்ற 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காலி பிரதம நீதவான் ஹர்ஷன கெக்குணவெல முன்னிலையில் சந்தேகநபர்கள் 6 பேரும் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதிகள் தினத்தை முன்னிட்டு கைதிகளை சந்திப்பதற்கு நேற்று (12) சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போது, கஞ்சிப்பானை இம்ரானை சந்திப்பதற்கு அவரின் தந்தை, சகோதரன் உள்ளிட்ட 6 பேர் பூசா சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர். இவர்களால் கஞ்சிப்பானை இம்ரானுக்காக எடுத்துச்செல்லப்பட்ட உணவுப்பொதியை சோதனைக்குட்படுத்திய போது, அதில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கையடக்கத்தொலைபேசிகளும் அதற்கான சார்ஜர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 6 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்கும் கஞ்சிப்பானை இம்ரானுக்கு எதிராக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதின்றத்தில் 17 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.