இலங்கை நிர்வாக சேவையினரின் பகிஷ்கரிப்பு நிறைவு

இலங்கை நிர்வாக சேவையினரின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு

by Staff Writer 12-09-2019 | 6:55 AM
Colombo (News 1st) சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை நிர்வாக சேவை சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, தொழிற்சங்க நடவடிக்கை முடிவுற்றுள்ளதாக இலங்கை நிர்வாக சேவை சங்கம் தெரிவித்துள்ளது. இந்தக் கலந்துரையாடலின்போது, எதிர்வரும் வாரங்களில் சம்பளப் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுகொடுக்க இணக்கம் எட்டப்பட்டதாக இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் தலைவர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கை நிர்வாக சேவை சங்கம், சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று மற்றும் நேற்று முன்தினம், சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வு, ஆட்பதிவு, ஓய்வூதியத் திணைக்களத்தின் செயற்பாடுகள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சம்பள உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழகத் தொழிற்சங்க ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்று (12) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. தமது பிரச்சினைக்கான உரிய தீர்வு கிடைக்கும் வரையில் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் தம்மிக எஸ் பிரியந்த தெரிவித்துள்ளார்.