வடக்கில் கஞ்சாவுடன் கைதான மூவருக்கு ஒத்திவைக்கப்பட்ட 20 மாத கடூழிய சிறை

வடக்கில் கஞ்சாவுடன் கைதான மூவருக்கு ஒத்திவைக்கப்பட்ட 20 மாத கடூழிய சிறை

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2019 | 1:30 pm

Colombo (News 1st) இலங்கையின் வடக்குக் கடலில் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட பிரதிவாதிகள் மூவருக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 20 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் நேற்று (11) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி இலங்கையின் வட கடல் பகுதியில், இந்திய பிரஜைகள் மூவர் 70 கிலோ 100 கிராம் கேரள கஞ்சாவுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பிலான குற்றப்பத்திரிகை, சட்டமா அதிபரால் ஏற்கனவே யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதுடன் வழக்கு இன்று (12) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, அரசதரப்பில் மாதினி விக்னேஷ்வரன் ஆஜராகியிருந்ததுடன் பிரதிவாதிகள் மூவருக்கு எதிராகவும் கஞ்சாவை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை உள்ளிட்ட 2 குற்றச்சாட்டுக்களின் கீழ் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 20 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பிரதிவாதிகள் மூவரும் குறித்த 2 குற்றச்சாட்டுக்களுக்கும் தலா 25,000 ரூபா வீதம் 50,000 ரூபா செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 வருட கால காலத்தை கவனத்தில் கொண்டே இந்த ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்