யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் நியமனத்தால் பாதிக்கப்பட்டோர் சுழற்சி முறையில் உண்ணாவிரதம்

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் நியமனத்தால் பாதிக்கப்பட்டோர் சுழற்சி முறையில் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2019 | 9:03 pm

Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டவர்களால் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து இந்த உணவு தவிர்ப்புப் ​போராட்டம் நேற்று (11) ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இரண்டாவது நாளாகவும் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

வெவ்வேறு பதவி நிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு, உயர்கல்வி அமைச்சிலிருந்து அனுப்பப்பட்ட பெயர்ப்பட்டியலில் நீண்ட காலம் தொண்டராகவும் ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றும் தமது பெயர்கள் இடம்பெறவில்லை என இவர்கள் கூறுகின்றனர்.

அரசியல் செல்வாக்கு அடிப்படையில், யாழ். பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்ட பெயர்ப்பட்டியலை பல்கலைக்கழகம் ஏற்றுள்ளதாக இவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

கலந்துரையாடலின் பின்னர் அவர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,

இவர்கள் பாராளுமன்ற அங்கத்தவர்களைக் கொண்டு பெயர்களைக் கேட்டார்கள். இப்போது அந்தப் பெயர்களையும் அழித்துவிட்டு வேறு பெயர்களுடன் அனுப்பியுள்ளார்கள். இவ்வளவு காலமும் இங்கு வேலை செய்து கொண்டு வந்தவர்களையும் புறக்கணித்துள்ளார்கள். ஹக்கீம் அவர்களுடன் பேச இருக்கின்றேன். அவருக்கு முழுமையான விபரங்களை ஒரு கடிதத்தில் அனுப்பி அவரோடு பேசப்பார்க்கின்றேன்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்