கோட்டாபய ராஜபக்ஸவின் மனுவிற்கு நீதிமன்றம் அனுமதி

கோட்டாபய ராஜபக்ஸவின் மனுவிற்கு நீதிமன்றம் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2019 | 1:54 pm

Colombo (News 1st) Avant Garde சம்பவம் தொடர்பில் தமக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை ஆட்சேபித்து கோட்டாபய ராஜபக்ஸ தாக்கல் செய்துள்ள மனுவின் கோரிக்கைகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (12) அனுமதி வழங்கியுள்ளது.

ஆணையாளரின் எழுத்துமூல அனுமதியின்றி, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என, கோட்டாபய ராஜபக்ஸவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

அதற்கமைய, கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முன்னெடுத்துச் செல்வதற்கான இயலுமை, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அற்றுப்போயுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸவின் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனை மனுவை நிராகரித்து, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட கட்டளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவினூடாக செல்லுபடியற்றதாகியுள்ளது.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஸவினால் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை நிராகரித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவும் இன்றுடன் செல்லுபடியற்றதாகியுள்ளது.

Avant Garde Maritime Services நிறுவனத்தினூடாக மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கியதனூடாக அரசிற்கு 1,140 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 8 பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை முதல்கட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதைத் தடைசெய்து இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்