தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறையும் ஏமாற்றம்

5 மாதங்களாகக் காத்திருந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறையும் ஏமாற்றம்

by Bella Dalima 11-09-2019 | 7:43 PM
Colombo (News 1st) 5 மாதங்களாகக் காத்திருந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறையும் ஏமாற்றம் 50 ரூபா கொடுப்பனவை எதிர்பார்த்து 5 மாதங்களாகக் காத்திருந்த மக்களுக்கு இம்முறையும் ஏமாற்றமே கிட்டியுள்ளது. பெருந்தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை நாள் சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி நீண்ட காலமாக ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் இவ்வருடம் ஜனவரி மாதம் கைச்சாத்திடப்பட்டது. 1000 ரூபா சம்பளக் கோரிக்கைக்கு செவிசாய்க்காத தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் 20 ரூபா சம்பள அதிகரிப்பை இம்முறை வழங்கியது. இந்நிலையில், பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 50 ரூபா மேலதிகக் கொடுப்பனவு வழங்க கடந்த மார்ச் 27 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதற்காக 1.2 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அரசாங்கம் அறிவித்தது. கிடைக்காத 50 ரூபா கொடுப்பனவிற்கு பல அரசியல் தலைமைகள் உரிமை கோரிய போதும், அத்தொகை தோட்டத்தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. அரசியல்வாதிகள் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் உறுதிமொழிகளை வழங்கிய போதிலும் நேற்று வழங்கப்பட்ட சம்பளத்திலும் அந்தத் தொகை வழங்கப்படவில்லையென பெருந்தோட்டத்தொழிலாளர்கள் கூறினர். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகள் நாட்டின் ஆட்சியை தீர்மானிக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. அவர்களுக்கு இவ்வாறு ஏமாற்றம் தொடருமாக இருந்தால், அடுத்த தேர்தலில் சிறந்த பாடம் கற்பிப்பார்கள் என்பது உறுதி.

ஏனைய செய்திகள்