ரத்துபஸ்வல சம்பவம்: குற்றப்பத்திரம் தாக்கல்

ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பில் பிரிகேடியர் அநுர தேசப்பிரிய உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

by Bella Dalima 11-09-2019 | 5:20 PM
Colombo (News 1st) ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பில் பிரிகேடியர் அநுர தேசப்பிரிய குணவர்தன மற்றும் மூன்று இராணுவ உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட மா அதிபரால் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுத்தமான குடிநீரை வழங்குமாறு கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது வெலிவேரிய - ரத்துபஸ்வல பகுதியில் துப்பாக்கி பிரயோகம் நடத்தி மூன்று பேரை கொலை செய்தமை, தாக்குதல் நடத்தி சிலரை காயப்படுத்தியமை உள்ளிட்ட 94 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரத்துபஸ்வல பகுதியில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றது. துப்பாக்கிப்பிரயோகம் நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், 12 பேர் காயமடைந்தனர். பிரதேச மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் 21 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கம்பஹா மேல் நீதிமன்றத்தில் மேனகா விஜயசுந்தர, விமல் ரணவீர மற்றும் நிசாந்த ஹப்புஆராச்சி ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.