பழைய விலையிலேயே கோதுமை மாவை விற்பனை செய்ய நிறுவனங்கள் இணக்கம்

by Bella Dalima 11-09-2019 | 6:48 PM
Colombo (News 1st) அதிகரிக்கப்பட்ட கோதுமை மாவின் விலையைக் குறைத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பழைய விலையிலேயே கோதுமை மாவை விற்பனை செய்வதற்கு நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்தது. கடந்த 6 ஆம் திகதி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 5 ரூபா 50 சதத்தினால் கோதுமை மா நிறுவனங்கள் அதிகரித்தன. கோதுமை மாவின் விலையை அதிகரித்தமை தொடர்பிலான விடயங்களை முன்வைப்பதற்காக வாழ்க்கைச்செலவு குழுவிற்கு கோதுமை மா நிறுவனங்கள் நேற்றைய தினம் அழைக்கப்பட்டிருந்தன. இதன்போது, பழைய விலையில் கோதுமை மாவை விற்பனை செய்வதற்கு நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்ததாக வாழ்க்கைச்செலவு குழு குறிப்பிட்டது. இந்த இணக்கப்பாடு தொடர்பில் சிங்கப்பூரிலுள்ள தங்களின் தலைமை அலுவலகத்திற்கு அறிவித்ததன் பின்னர், அதனை அமுல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக கோதுமை மா நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கோதுமை மாவின் விலை அதிகரித்தமை தொடர்பில் காரணங்களை முன்வைப்பதற்கு 3 வார கால அவகாசம் அமைச்சர் பி. ஹரிசனால் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, அனுமதியின்றி கோதுமை மா விலையை அதிகரித்தமை தொடர்பில், கோதுமை மா நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்திருந்தது.