ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகும் கல்வி அமைச்சர்

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகும் கல்வி அமைச்சர்

by Staff Writer 11-09-2019 | 9:04 AM
Colombo (News 1st) கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இன்று (11) ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார். கல்வி அமைச்சின் வௌியீட்டுத் திணைக்களப் பணிப்பாளராகக் கடமைாற்றும் I.M.K.B. இளங்கசிங்கவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று விசாரணை தொடர்பில் சாட்சியம் வழங்குவதற்காக அமைச்சர் இன்று ஆஜராகவுள்ளார். கல்வி அமைச்சரினால் தீங்கிழைக்கும் நோக்கில் தமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இளங்கசிங்க, ஜனாதிபதி ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். பாடசாலைப் புத்தகங்களில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் நிழற்படம் அச்சிடப்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது வாக்குமூலம் வழங்கிய I.M.K.B. இளங்கசிங்கவுக்கு இடமாற்றம் வழங்குவதற்கும் கல்வி அமைச்சரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, I.M.K.B. இளங்கசிங்கவுக்கு மீண்டும் கல்வி அமைச்சின் வௌியீட்டுத் திணைக்களப் பணிப்பாளர் பதவி வழங்க வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கல்வி அமைச்சினால் I.M.K.B. இளங்கசிங்கவுக்கு எதிராக மீண்டும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கமல் அமரவீர இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல, பெருந்தெருக்கள் அமைச்சராகக் கடமையாற்றிய காலப் பகுதியில் அதிகமான உத்தியோகத்தர்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையில் இணைத்துக் கொண்டதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பிலான சாட்சி விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்