ரணில் – சஜித் இடையிலான சந்திப்பில் முன்னேற்றம்: ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான அறிவிப்பு விரைவில்

ரணில் – சஜித் இடையிலான சந்திப்பில் முன்னேற்றம்: ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான அறிவிப்பு விரைவில்

எழுத்தாளர் Bella Dalima

11 Sep, 2019 | 8:26 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு நேற்றிரவு இடம்பெற்றது.

எதிர்வரும் சில தினங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடப்படவுள்ளதாக இந்த கலந்துரையாடலின் பின்னர் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்த கலந்துரையாடல் அலரி மாளிகையில் நேற்றிரவு 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.

பிரதமருடன், அமைச்சர் ராஜித்த சேனாரத்னவும் இதில் கலந்துகொண்டிருந்தார்.

அமைச்சர்களான கபீர் ஹாசிம், ரஞ்ஜித் மத்தும பண்டார மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் நேற்றிரவு அலரி மாளிகைக்கு வருகை தந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். நேற்றிரவு 10.45 மணியளவில் கலந்துரையாடல் நிறைவுபெற்றது.

இதன் பின்னர், எதிர்வரும் சில தினங்களில் சிறந்த பெறுபேறு கிடைக்கும் என தான் நினைப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

‘ஏகமனதாக தீர்மானம் எடுப்போம் என்பது தான் எங்களால் கூற முடிந்த சிறந்த தகவல்’ என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் கூறினார்.

இந்தக் கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமாக அமைந்ததாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எதிர்வரும் சில தினங்களில் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்படுவார் என அவர் வௌியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய சந்திப்பு வெற்றிகரமானது எனவும் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்வரும் தினங்களில் பெயரிடப்படுவார் எனவும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ வௌியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்