புற்றுநோய் சிகிச்சையின் பின் நாடு திரும்பிய ரிஷி

புற்றுநோய் சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார் ரிஷி கபூர்

by Bella Dalima 11-09-2019 | 4:17 PM
பிரபல பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் (67) அமெரிக்காவில் புற்றுநோய் சிகிச்சையை முடித்துக்கொண்டு நேற்று (10) மும்பை திரும்பினார். கடந்த ஆண்டு இறுதியில் அவர் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். இந்நிலையில், சிகிச்சையை முடித்துக்கொண்டு, அமெரிக்காவில் இருந்து மும்பை திரும்பினார். ''11 மாதங்கள் 11 நாட்களுக்குப் பிறகு வீட்டிற்குத் திரும்பியுள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் நன்றி,'' என அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். ரிஷி கபூருடன் அவரது மனைவியும், நடிகையுமான நீத்து கபூரும் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு ரிஷி கபூருக்கு சிகிச்சை மேற்கொண்டிருந்தபோது ஷாருக் கான், ஆலியா பட், அமிர் கான், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அனுபம் கெர், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர். 1970ஆம் ஆண்டு மேரா நாம் ஜோக்கர் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரிஷி கபூர், பாபி திரைப்படத்தில் டிம்பிள் கபாடியாவுடன் சேர்ந்து நடித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு கடந்த 2000 ஆம் ஆண்டு வரை திரைத்துறையில் வெற்றிகளைக் குவித்தார். இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அவர் அறியப்படுகிறார். தற்போது பாலிவுட்டில் பிரபலமாக உள்ள ரன்பீர் கபூர், ரிஷி கபூரின் மகனாவார்.