கோட்டாபயவிற்கு எதிரான வழக்கை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு நிராகரிப்பு

கோட்டாபயவிற்கு எதிரான வழக்கை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு நிராகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

11 Sep, 2019 | 5:30 pm

Colombo (News 1st) டீ.ஏ. ராஜபக்ஸ அருங்காட்சியக கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள வழக்கை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்த மேன்முறையீட்டை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்திற்குள்ள அதிகாரம் மற்றும் குற்றப்பத்திரம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள விதம் ஆகியவற்றை சவாலுக்குட்படுத்தி, கோட்டாபய ராஜபக்ஸ இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பீ.தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், சட்ட மா அதிபர் மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகிய இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட விடயங்கள் இன்று பரிசீலிக்கப்பட்டன.

டீ.ஏ. ராஜபக்ஸ அருங்காட்சியக கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, பொலிஸ் மா அதிபரினால் சட்டவிரோதமாக ஸ்தாபிக்கப்பட்ட பிரிவு என தற்போது எதிர்ப்பு முன்வைக்கப்பட்டுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஸ சார்பில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

சட்டவிரோத நிறுவனமொன்று முன்னெடுத்த விசாரணை சட்ட விரோதமானது என ஜனாதிபதி சட்டத்தரணி இதன்போது குறிப்பிட்டார்.

மேன்முறையீடு மீதான விசாரணைக்கு அனுமதி கோரிய சட்டத்தரணி, அதுவரையில் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார்.

குற்றப்பத்திரம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள விதம் தொடர்பில் எவ்வித சட்டவிரோதத்தன்மையும் இல்லை என சட்ட மா அதிபர் சார்பில் விடயங்களை மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் விராத் தயாரத்ன முன்வைத்தார்.

பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள சூழ்ச்சி குற்றச்சாட்டு பாரதூரமானது எனவும் இதன் காரணமாக மேன்முறையீடு தொடர்பான விசாரணைக்கு அனுமதி வழங்க வேண்டாம் எனவும் உயர் நீதிமன்றத்தில் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் கோரிக்கை விடுத்தார்.

விடயங்களை பரிசீலித்த உயர் நீதிமன்றம் கோட்டாபய ராஜபக்ஸவின் மேன்முறையீட்டு மனுவை நிராகரித்தது.

டீ.ஏ. ராஜபக்ஸ அருங்காட்சியக கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இந்த மாதம் 15 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்