இரண்டாவது நாளாகத் தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு

இரண்டாவது நாளாகத் தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2019 | 7:35 am

Colombo (News 1st) சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை இரண்டாவது நாளாக இன்றும் (11) முன்னெடுக்கப்படுகின்றது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை நிர்வாக உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம், ஓய்வூதியத் திணைக்களம், மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம், பிரதேச செயலகங்களின் செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

எவ்வாறாயினும், தமது கோரிக்கைக்குத் தீர்வினை வழங்குவதற்கு அரசாங்கத்தில் இயலாமலுள்ளதாக இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் தலைவர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, பணிப்பகிஷ்கரிப்பினால் திணைக்களங்களின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை முறைப்பாடுகள் ஏதும் கிடைக்கவில்லை என அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

அத்துடன், சம்பளப் பிரச்சினை தொடர்பிலான தொழிற்சங்கத்தின் யோசனையை, அமைச்சரவை உபகுழுவிடம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சம்பளப் பிரச்சினையை முன்வைத்து பல்கலைக்கழக சேவையாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பும் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கின்றது.

தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என பல்கலைக்கழக சேவையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்