7 அரசியல் கட்சிகளுக்கு காலக்கெடு

7 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு காலக்கெடு

by Staff Writer 10-09-2019 | 4:51 PM
Colombo (News 1st)  சிக்கலை எதிர்கொண்டுள்ள, அங்கீகரிக்கப்பட்ட 7 அரசியல் கட்சிகளும் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் தங்களின் சிக்கல்களை நிவர்த்தித்துக்கொள்ள வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது. குறித்த கட்சிகளின் பிரதிநிதிகளை நேற்றைய தினம் அழைத்து இதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். சில கட்சிகளின் உரித்துரிமையை தீர்மானிப்பதற்கு நீதிமன்றத்தை நாடியுள்ளமை, ஒரு கட்சியின் உரித்திற்காக சில தரப்புகள் முன்வருகின்றமை, ஒரு கட்சியின் சார்பில் பல செயலாளர்கள் முன்வந்துள்ளமை உள்ளிட்ட பல சிக்கல்கள் குறித்த கட்சிகளிடம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், லிபரல் கட்சி, ஜனநாயக முன்னணி உள்ளிட்ட 7 கட்சிகள் இவ்வாறான சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளன. எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் தங்களின் கட்சிக்குள் காணப்படும் சிக்கல்களை நிவர்த்தித்துக்கொள்ளாத பட்சத்தில், இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலிலிருந்து அந்த கட்சிகளின் பெயர்கள் நீக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கையில் 70 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் காணப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.