நிஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல்

by Staff Writer 10-09-2019 | 4:25 PM
Colombo (News 1st) அவன்ற் கார்ட் சம்பவம் தொடர்பில் மேஜர் நிஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 7573 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எவ்வித அனுமதிப்பத்திரமும் இன்றி, Avant Garde Maritime Services நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலில் தன்னியக்க துப்பாக்கி உள்ளிட்ட வெடிபொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவன்ற் கார்ட் கப்பலில் 816 தன்னியக்க துப்பாக்கிகளும் 2,02,935 துப்பாக்கி ​ரவைகளும் காணப்பட்டமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரக்னா லங்கா நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித பியசிறி பெர்னாண்டோ, அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி மேஜர் நிஸங்க கருணாரத்ன பண்டா, ரக்னா லங்கா நிறுவனத்தின் அத்தியட்சகர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் சிரேஷ்ட பதில் செயலாளர் சொலமன் திசாநாயக்க, அவன்ற் கார்ட் கப்பலின் கெப்டனாக செயற்பட்ட யுக்ரைன் நாட்டு பிரஜை மற்றும் பொன்னுத்துறை பாலசுப்ரமணியம், Avant Garde Maritime Services நிறுவனம் உள்ளிட்ட 13 பேர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இலங்கை நீதித்துறை வரலாற்றில் பிரதிவாதிகளுக்கு எதிராக அதிக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள வழக்காக இந்த வழக்கு பதிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஏனைய செய்திகள்