by Staff Writer 10-09-2019 | 8:10 PM
Colombo (News 1st) தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரந்தெனிய நலன்புரி சங்கம் என்ற அமைப்பு விவசாய அமைச்சின் கட்டடம் ஒன்றை வாடகைக்கு பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பிலான முறைப்பாட்டிற்கு அமைய பிரதமர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
விவசாய அமைச்சு இயங்கி வந்த கட்டடத்தை பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்காக சுவீகரிப்பதற்காக 2015 செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் மற்றும் அமைச்சின் நடவடிக்கைகள் D.B.J. கட்டடத்திற்கு மாற்றப்பட்டமை தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக பிரதமர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியொருவர் இதற்கான கடிதத்தை பிரதமரின் விசேட உதவி செயலாளர் ஒருவரிடம் அலரி மாளிகையில் வைத்து வழங்கியுள்ளார்.
இதேவேளை, கட்டடத்தை வாடகைக்கு வழங்கியமை தொடர்பில் முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க இன்று ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கினார்.
இந்தக் கட்டடத்தை அமைச்சிற்காக பெற்றுக்கொள்வதற்கு தான் ஆர்வம் செலுத்தவில்லையெனவும் இதற்காக அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.
கட்டடத்தை பெற்றுக்கொள்ளும் போது, பிரதமர் அதற்கான அனைத்து விடயங்களையும் ஏற்பாடு செய்ததாக முன்னாள் அமைச்சர் ஆணைக்குழு முன்னிலையில் கூறியுள்ளார்.