அகில விராஜ் காரியவசத்தின் கடிதத்திற்கு சுஜீவ சேனசிங்க பதில் 

by Staff Writer 10-09-2019 | 8:00 PM
Colombo (News 1st)  கட்சியின் யாப்பை மீறும் வகையில் செயற்பட்டதாகத் தெரிவித்து அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் அனுப்பிய கடிதத்திற்கு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க பதிலளித்தார். எவ்வித வௌிப்படைத் தன்மையும் இன்றி கடந்த மாதம் 26 ஆம் திகதி fax மூலம் அனுப்பப்பட்ட கடிதத்தின் உள்ளடக்கத்தை பார்க்கும் போது அது பொதுச்செயலாளரினாலே அனுப்பப்பட்ட ஒன்றா என்ற சந்தேகம் எழுவதாக சுஜீவ சேனசிங்க தனது பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தேவையற்ற பிரபல்யத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், இவ்வாறான கடிதத்தை அனுப்பியிருக்கலாம் என தனக்கு புலப்படுவதாக சுஜீவ சேனசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் கடிதம் செயலாளர் அன்றி வேறு ஒருவரினால் அனுப்பப்பட்டிருந்தால், அவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்தவருக்கு அல்லது நபர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கிடைத்துள்ள முறைப்பாட்டின் பிரதியை முதலில் தமக்கு வழங்க வேண்டும் எனவும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் சுஜீவ சேனசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கட்சியின் யாப்பை மீறும் வகையில் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அனுப்பியிருந்த கடிதத்திற்கு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித்.பி பெரேரா நேற்று பதலளித்திருந்தார்.