துப்பாக்கிகளைத் திருடிய இராணுவ சிப்பாய் கைது

பொலிஸ் நிலைய துப்பாக்கிகளைத் திருடிய இராணுவ சிப்பாய் கைது

by Staff Writer 10-09-2019 | 4:10 PM
Colombo (News 1st)  அக்குரஸ்ஸ பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளின் போது பாணந்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து திருடப்பட்ட T56 ரக துப்பாக்கிகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அக்குரஸ்ஸ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய, விசாரணைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று (09) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளினூடாக மேலும் இரண்டு சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் பாணந்துறை பகுதியில் கடமைபுரியும் இராணுவ சிப்பாய் ஒருவர் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, அக்குரஸ்ஸ பகுதியிலிருந்து T56 ரக துப்பாக்கிகள் இரண்டும் மெகசின் மற்றும் துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணைகளின் அடிப்படையில், குறித்த துப்பாக்கிகளைத் திருடிய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் பாணந்துறை - நல்லுருவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருட்டு சம்பவத்திற்கு உதவி புரிந்த மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.