பிரதமருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

பிரதமருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

by Staff Writer 09-09-2019 | 4:54 PM
Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என பிரதமருக்கு இன்று (09) அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தொலைநகல் மூலமாக பிரதமர் அலுவலகத்திற்கும் அலரி மாளிகைக்கும் அனுப்பப்பட்டுள்ளதுடன் நாளை அது நேரடியாக கையளிக்கப்படவுள்ளது. விவசாய அமைச்சின் கட்டடமொன்றைக் குத்தகைக்குப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக சாட்சியமளிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.     இராஜகிரியவில் அமைந்துள்ள டீ பீ ஜே கட்டடத்தை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கு முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க, பிரதமரின் ஆலோசனையின் பேரில் அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த காலப்பகுதியில் பத்தரமுல்ல சுஹூருபாயவில் 4 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் கூறியுள்ளார். இதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் பிரதமரிடம் விசாரணைகளை முன்னெடுப்பது சிறந்தது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.