பொதுச் செயலாளரின் கடிதத்திற்கு அஜித் பி பெரேரா, சுஜீவ சேனசிங்க பதில்

பொதுச் செயலாளரின் கடிதத்திற்கு அஜித் பி பெரேரா, சுஜீவ சேனசிங்க பதில்

பொதுச் செயலாளரின் கடிதத்திற்கு அஜித் பி பெரேரா, சுஜீவ சேனசிங்க பதில்

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2019 | 8:50 pm

Colombo (News 1st) கட்சியின் யாப்பை மீறியுள்ளதாக் குற்றஞ்சாட்டி, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா இன்று எழுத்துமூலம் பதிலளித்துள்ளார்.

கட்சியின் யாப்பை மீறியுள்ளதாகக் கூறி, அஜித் பி பெரேரா மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்காக திகதியொன்றை அறிவித்து கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் சில தினங்களுக்கு முன்னர் கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

சாட்சியமளிப்பதற்கு வருகை தராமையால், இன்றைய தினத்திற்குள் எழுத்துமூலம் தெளிவுபடுத்துமாறு கட்சியின் பொதுச்செயலாளர் பின்னர் அறிவித்திருந்தார்.

இதற்கமைய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களான அஜித் பி பெரேரா இன்று முற்பகல், கட்சியின் தலைமையத்திற்குச் சென்று எழுத்துமூலம் பதிலளித்துள்ளார்.

கட்சியின் பொதுச்செயலாளர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கடிதமோ அறிவித்தலோ தமக்குக் கிடைக்கவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட விடயங்களுக்கமைய தாம் பதிலளிப்பதாகத் அஜித் பி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஒருபோதும் கட்சியின் யாப்பை மீறவில்லை என்பதால், பொதுச் செயலாளரின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க விருப்பம் தெரிவித்துள்ளவர்களிடையே, சஜித் பிரேமதாசவிற்கே இந்த நாட்டில் அதிகளவான மக்களின் ஆதரவுள்ளது. ஆகவே, சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிப்பது, ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்வதற்குக் காரணமாக முடியாது. அவ்வாறான சரத்து எமது கட்சியில் இல்லை. கட்சியின் உள்ளக தீர்மானம் தொடர்பில் மக்களுடன், கட்சி ஆதரவாளர்களுடன், செயற்குழுவுடன் கலந்துரையாடுவதைத் தடுக்கும் சரத்து இல்லை. இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள், சஜித் பிரேமதாச வேட்பாளராக களமிறங்க வேண்டும் என உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளனர். 123 மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 97 பேர் கூடி, சஜித் பிரேமதாச வேட்பாளராக வேண்டும் என தீர்மானித்துள்ளனர். பாராளுமன்றக் குழுவிலுள்ள 77 பேரில் 50 இற்கும் அதிகமானோர் கையொப்பமிட்டு, சஜித் பிரேமதாசவே எமது கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வேண்டுமெனத் தெரிவித்து தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர். இவ்வாறான நிலைமையில், எனக்கும் சுஜீவவிற்கும் எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறுவதை என்னால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது. நான் அச்சமடையும் நபரல்ல. ஆயுதங்களைக் காண்பித்தும் என்னைப் பயமுறுத்த முடியாது. கடிதம் அனுப்பி என்னை பயமுறுத்தவும் முடியாது. மக்களின் நிலைப்பாட்டிற்கு மாத்திரமே நான் பயப்படுவேன். சஜித் பிரேமதாச, ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகி வருகின்றார். ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டணியின் வேட்பாளராக அவர் களமிறங்குவார் என்பதை என்னால் மிகவும் பொறுப்புடன் கூற முடியும்

என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

கேள்வி: ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் கூட்டணி அமைக்கும் எதிர்பார்ப்பு உள்ளதா?

பதில்: எமது கொள்கையுடன் இணங்கும் அனைவருடனும் நாம் கூட்டணி அமைப்போம்.

========

இதேவேளை, சுஜீவ சேனசிங்கவும் பதில் வழங்கியுள்ளார்.

அதனை நாங்கள் கணக்கில் எடுக்கவில்லை. போலியாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைளைக் கண்டு அஞ்சும் நபரல்ல சுஜீவ சேனசிங்க. அசோக பிரியந்த ஒழிந்துவிட்டார். அளுத்தகமகே எமது கட்சியில் இருந்து சென்றார். இன்னும் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவில்லை. ரத்தன தேரர் உள்ளார். விஜயதாச ராஜபக்ஸ உள்ளார். அவர்கள் கட்சிக்கு எதிராக செயற்பட்டார்கள். நான் கட்சிக்காக பாடுபட்டேன். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தபோது மஹிந்த ராஜபக்ஸவை தோற்கடிப்பதற்கான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்த என்னைப் போல் ஒருவர் யாரும் இல்லை. எனக்கு Fax மூலம் கடிதம் அனுப்பியுள்ளதாக ஊடகங்கள் மூலமே நான் அறிந்துகொண்டேன். இவற்றுக்கு அஞ்சுபவன் அல்ல சுஜீவ சேனசிங்க
என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைசச்சர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி: உங்களை கட்சியில் இருந்து நீக்கவுள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளதே?

பதில்: கட்சியில் இருந்து மாத்திரம் அல்ல எதிலிருந்து வௌியேற்றினாலும் எனது போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை. எனக்கு கட்சி தேவை இல்லை. நான் கட்சி அரசியலில் ஈடுபட்டு பிச்சை எடுப்பதற்கு வரவில்லை.

கேள்வி: சஜித் பிரேமதாச வேறு கட்சியில் போட்டியிடுவாரா?

பதில்: இல்லை வேறு கட்சி உருவாக்கும் எண்ணம் இல்லை. சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், திகாம்பரம், ரவூப் ஹக்கிம், றிசாட் பதியுதீன் உள்ளிட்ட அமைச்சர்கள் மொட்டின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலர், சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்துமாறு ஏற்கனவே கோரியுள்ளனர்-

கேள்வி: சஜித் பிரேமதாவிற்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கவின் பெயர் அறிவிக்கப்பட்டால்?

பதில்: கட்சி சார்பில் பெயரிடப்பட்டால் நாங்கள் வேலை செய்வோம். கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழுவினர் பெயரிட வேண்டும். அந்த ஜனநாயகத்தை வழங்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம். எங்களுக்கு சந்தர்ப்பம் வரும் அந்த சந்தர்ப்பத்தில் சஜித் பிரேதாசவை நிறுத்தி வெற்றி பெறுவோம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்