அறிக்கைகள் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைப்பு

தேசிய தெளஹீத் ஜமாத் தொடர்பான அறிக்கைகள் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக அறிவிப்பு

by Staff Writer 07-09-2019 | 3:48 PM
Colombo (News 1st) கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 21 தாக்குதல் வரையிலான காலப்பகுதியில் தடை செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பு தொடர்பிலான அறிக்கைகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 347 அறிக்கைகள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் பிணை உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மீளாய்வு மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ், குறித்த 347 புலனாய்வு அறிக்கைகளில் 131 அறிக்கைகள் பொலிஸ்மா அதிபருக்கும், 97 அறிக்கைகள் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கும் அனுப்பப்பட்டிருந்ததாக மன்றுக்கு குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், மனு மீதான விசாரணை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.