முப்பாய்ச்சலில் தேசிய சாதனை: தெற்காசிய விளையாட்டு விழாவிற்கு தகுதி பெற்றுள்ள சப்ரின் அஹமட்

முப்பாய்ச்சலில் தேசிய சாதனை: தெற்காசிய விளையாட்டு விழாவிற்கு தகுதி பெற்றுள்ள சப்ரின் அஹமட்

எழுத்தாளர் Staff Writer

07 Sep, 2019 | 7:49 pm

Colombo (News 1st) மாத்தறை வெலிகம அரபா தேசியக் கல்லூரியின் பழைய மாணவரான சப்ரின் அஹமட் முப்பாய்ச்சலில் தேசிய சாதனையாளராக திகழ்கின்றார்.

கடந்த 16 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 97 ஆவது தேசிய மெய்வல்லுனர் போட்டிகளில் ஆடவருக்கான முப்பாய்ச்சலில் அவர் தங்கப்பதக்கம் வென்று சாதித்தார்.

போட்டியில் அவர் 16.33 மீட்டர் தூரத்திற்கு திறமையை வெளிப்படுத்தினார்.

இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவிற்கான தகுதிச்சுற்றில் ஆடவருக்கான முப்பாய்ச்சல் போட்டியில் சப்ரின் அஹமட் தங்கப்பதக்கம் வென்றார்.

இதன்போது, முப்பாய்ச்சலில் தேசிய சாதனையாளராகத் திகழ்ந்த மேல் மாகாணத்தின் கிரேஷன் தனஞ்சயவின் சாதனையையும் சப்ரின் அஹமட் முறியடித்தார்.

இதற்கமைய, சப்ரின் அஹமட் 16.79 மீட்டர் தூரத்திற்கு தனது திறமையை வெளிப்படுத்தியதோடு , தேசிய மட்ட போட்டிகளில் தனது அதிசிறந்த பெறுதியையும் பதிவு செய்தார்.

இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவிற்கு தகுதி பெற்றுள்ள சப்ரின் அஹமட் , இலங்கைக்கு பதக்கமொன்றை வென்று கொடுக்கும் முயற்சியுடன் இந்நாட்களில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்