ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு பிரதமரை அழைக்கத் திட்டம்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு பிரதமரை அழைக்கத் திட்டம்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு பிரதமரை அழைக்கத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

07 Sep, 2019 | 5:41 pm

Colombo (News 1st) கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அழைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் கட்டடமொன்றை குத்தகைக்கு பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இராஜகிரியவில் அமைந்துள்ள DPJ கட்டடத்தை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கு முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிரதமரின் ஆலோசனையின் பேரிலேயே அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்ததாக இதுவரையான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் பத்தரமுல்ல – சுஹூருபாயவில் நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் கூறினார்.

இதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் பிரதமரிடம் விசாரணைகளை முன்னெடுப்பது சிறந்தது என ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் உபாலி அபேரத்ன முன்னெடுத்த விசாரணையின் போது பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இதற்கிணங்க, பிரதமரை விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரை அழைப்பது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழுவின் அரச சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிக்கு ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் உபாலி அபேரத்ன ஆலோசனை வழங்கியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்