by Staff Writer 07-09-2019 | 3:56 PM
Colombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் வாக்கெடுப்பை 47 மத்திய நிலையங்களினூடாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 11 ஆம் திகதி நடத்தப்படவுள்ள எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 5 பிரதான கட்சிகள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
தேர்தலுக்காக 15 மில்லியன் ரூபா வரை செலவிடப்படலாமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, தபால்மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றவர்கள் எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க கோரியுள்ளார்.
எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தல் அடுத்த மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளமைக்கான வர்த்தமானியை காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதானபத்திரண நேற்று முன்தினம் (05) வௌியிட்டார்.
எல்பிட்டிய பிரதேச சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உடனடியாக தேர்தலை நடத்துமாறு உயர் நீதிமன்றம் கடந்த 30 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டது.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது ஐனநாயக ஐக்கிய தேசிய முன்னணி எல்பிட்டிய பிரதேச சபைக்கு தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்து அந்தக் கட்சியின் செயலாளர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், மனு மீதான தீர்ப்பை அறிவித்த போதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 2019 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பில் பெயர்களை உள்ளடக்காதவர்கள் தமது பெயர்களை பதிவு செய்வதற்கான கால எல்லை எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இதற்கான சந்தர்ப்பம் கடந்த மாதம் 23 ஆம் திகதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2019 வாக்காளர் இடாப்பின் பிரதி இம்மாதம் 19 ஆம் திகதி வரை காட்சிப்படுத்தப்படவுள்ளதாக
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
கிராம சேவையாளர் காரியாலயம், மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் மற்றும் மாவட்ட செயலகத்தில் வாக்காளர் இடாப்பு காட்சிப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.