இன்று நள்ளிரவு முதல் பாண் விலை அதிகரிப்பு

by Staff Writer 06-09-2019 | 5:04 PM
Colombo (News 1st) இன்று (06) நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 2 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன குறிப்பிட்டார். கோதுமை மா நிறுவனங்களினூடாக ஒரு கிலோகிராம் கோதுமையின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இன்று முற்பகல் அறிவிக்கப்பட்டது. இதேவேளை, கோதுமை மாவை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அனுமதியின்றி கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில், அதிக விலையில் கோதுமை மாவை விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறியும் நோக்கில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது. சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்படும் சில்லறை வியாபாரிகள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் விநியோகத்தர்கள் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.