சந்தேகத்திற்கிடமான அமெரிக்க பிரஜைகள் தொடர்பில் அரசாங்கம் ஆராயவில்லை என விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

by Bella Dalima 06-09-2019 | 8:41 PM
Colombo (News 1st) கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலொன்றுக்கு கடந்த ஜூலை 30 ஆம் திகதி வருகை தந்த அமெரிக்க பிரஜைகளின் பயணப்பொதிகளை சோதனையிடுவதற்கு இடமளிக்காமை தொடர்பில் அமெரிக்க தூதரகம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. அதன் ஊடாக இந்த சம்பவத்தை அமெரிக்க தூதரகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். எனினும், அந்த பயணப்பொதிகளுக்கு என்ன நேர்ந்தது என்பதையும் அதனை சோதனையிட அனுமதிக்காமைக்கான காரணத்தையும் தற்போது அவை எங்கே உள்ளன என்பதையும் அமெரிக்க தூதரகம் கூற வேண்டும் என விமல் வீரவன்ச வலியுறுத்தினார். அமெரிக்கா அல்லது வேறொரு நாட்டிற்குத் தேவையான வகையில் செயற்படக்கூடிய நாடு இதுவல்ல எனவும் இலங்கை அவ்வாறு மாறுவதற்கு இடமளிக்கப்போவதில்லை எனவும் விமல் வீரவன்ச கூறினார். மேலும், இவ்வாறான விடயத்தை தாம் வௌிக்கொணர்ந்த பின்னரும், குறைந்தபட்சம் இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதாகக் கூட அரசாங்கம் கூறவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.