ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

by Staff Writer 06-09-2019 | 7:47 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடினார். இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகிய இந்த கலந்துரையாடலில் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம், கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம், காமினி ஜயவிக்ரம பெரேரா, தயா கமகே, மலிக் சமரவிக்ரம மற்றும் சரத் பொன்சேகா உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டிருந்தனர். இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் நண்பகல் 12.30 மணிக்கு நிறைவடைந்தது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் புத்த சாசனம் மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஊடகங்களுக்கு பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
இன்று கலந்துரையாடி நாங்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்தோம். நாங்கள் அனைவரும் சஜித் பிரேமதாச, பிரதமர் உள்ளிட்டோருடன் கலந்துரையாட தினம் ஒன்றை தீர்மானிக்கவுள்ளோம். பிரதமரும் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடுவார். அதன் பின்னர் யார் ஜனாதிபதி, யார் பிரதமர், யார் கட்சித் தலைவர் போன்ற தீர்மானங்களை எடுத்து, நாங்கள் நாட்டு மக்களிடம் கூறுவோம். 77 இல் ஜே.ஆர். பிரேமதாச உள்ளிட்டோர் முன்னிலை பெற்றதைப் போல இன்றும் எம் மத்தியில் இருக்கின்றனர். பிரதமர் ரணில், பிரதித் தலைவர் சஜித், சபாநாயகர் கரு ஜயசூரிய மூன்று பேரும் உள்ளனர். அவர்களில் அதிக ஆதரவைப் பெற்றுள்ளவருடன் முன்னோக்கி வேலைத்திட்டங்களை செயற்படுத்துவோம்.