மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சிம்பாப்வேயின் ஜனாதிபதியாகவிருந்த ரொபர்ட் முகாபே காலமானார்

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சிம்பாப்வேயின் ஜனாதிபதியாகவிருந்த ரொபர்ட் முகாபே காலமானார்

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சிம்பாப்வேயின் ஜனாதிபதியாகவிருந்த ரொபர்ட் முகாபே காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

06 Sep, 2019 | 3:27 pm

Colombo (News 1st) மூன்று தசாப்தங்களுக்கு மேலாக சிம்பாப்வேயின் ஜனாதிபதியாகவிருந்த ரொபர்ட் முகாபே தனது 95 ஆவது வயதில் இன்று காலமானார்.

சிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ரொபர்ட் கெப்ரியேல் முகாபே 1924 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி குடாமாவில் பிறந்தார்.

1960-களில் ஆபிரிக்காவில் விடுதலை போராட்ட வீரராக இருந்த ரொபர்ட் முகாபே, சிம்பாப்வே விடுதலை பெற்றதன் பின்னர் அந்நாட்டின் முதலாவது கறுப்பின தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

தச்சரின் பிள்ளையாக பிறந்த அவர் ஏழ்மையிலும் கல்வியைக் கைவிடவில்லை.

அனைத்து மக்களையும் சமமாக நடத்த வேண்டும், அனைவரது திறமைகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் போன்ற வாசகங்களை மாணவ பருவத்திலேயே முகாபேயின் ஆசிரியர் அவருக்கு கற்றுக்கொடுத்துள்ளமையை வரலாறுகள் கூறுகின்றன.

கானாவில் தனது உயர் கல்வியை தொடர்ந்த ரொபர்ட் முகாபே, 1960 ஆம் ஆண்டு சிம்பாவேவிற்கு மீளத்திரும்பிய போது அப்போதைய பிரித்தானிய காலனித்துவ ஆட்சியினால் கறுப்பின மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளமையை அறிந்துகொண்டார்.

தனது கறுப்பின சமூகத்திற்காக போராட்டம் என்ற ஆயுதத்தை கையிலேந்திய ரொபர்ட் முகாபே, பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்பு பேரணிகளையும் தொடர்ச்சியாக நடத்தி காலனித்துவ ஆட்சியிலிருந்து சிம்பாப்வேயை விடுவித்தார்.

மார்க்ஸிஸத்தின் மூலம் கானா எவ்வாறு விடுதலை பெற்றது என்பது தொடர்பில் பல்வேறு உரைகளையும் நிகழ்த்தினார்.

பல சவால்களையும் சிறைவாசத்தையும் அனுபவித்த ரொபர்ட் முகாபேயின் முயற்சியின் விளைவாக, பிரித்தானிய அரசாங்கம் 1980 ஆம் ஆண்டு காலனித்துவத்தை கைவிட்டு சிம்பாப்வேயை சுதந்திர நாடாக அறிவித்தது.

சிம்பாப்வேயின் ஜனாதிபதியாக நீண்டகாலம் சேவையாற்றிய ரொபர்ட் முகாபே, எவரும் எதிர்பாராத வகையில் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, புதிய ஜனாதிபதியாக அந்நாட்டின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த எமர்ஸன் மனன்கக்வா பதவியேற்றார்.

ரொபர்ட் முகாபேயால் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்த எமர்ஸன், நாட்டை விட்டு வெளியேறி தென் ஆபிரிக்காவில் தஞ்சமடைந்தவர்.

எமர்ஸனின் பணி நீக்கமானது அந்நாட்டு அரசாங்கத்தில் இராணுவம் தலையீடு செய்யவும் முகாபேயின் 37 வருட கால ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்படவும் வழிவகுத்தது.

பாராளுமன்றத்தில் முகாபேக்கு எதிராக கண்டனத் தீர்மானத்தை கொண்டு வருவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்த நிலையில், முகாபேயால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த அந்நாட்டு பாராளுமன்றத்தில் கடிதமொன்று வாசிக்கப்பட்டது.

எதுவித தடையுமற்ற வகையில் அமைதியான அதிகார கைமாற்றம் இடம்பெறுவதற்கு வழியேற்படுத்தி தரும் வகையில் , தாம் பதவி விலகுவதாகவும் தனது தீர்மானம் தன்னால் சுயமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் முகாபே அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அன்றைய தினத்துடன் முகாபேயின் 37 வருட கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

ரொபர்ட் முகாபே, புரட்சியாளனாக உருவெடுத்து, தனது 93 ஆவது வயது வரையிலும் அரசியலின் பல பரிணாமங்களினூடாக மூன்று தசாப்த காலமாக ஆட்சிப்பீடத்தை தக்கவைத்துக்கெண்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்