மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 06-09-2019 | 4:05 PM
Colombo (News 1st) பணியாளர்களின் பகிஷ்கரிப்பினால் சில மிருகக்காட்சி சாலைகளுக்குள் சுற்றுலாப் பயணிகள் பிரவேசிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெஹிவளை, ரிதியகம மற்றும் பின்னவல யானைகள் சரணாலயம் உள்ளிட்ட பல மிருகக்காட்சி சாலைகளின் நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிகா மல்சிங்க தெரிவித்தார். எனினும், பின்னவல தேசிய பூங்காவின் நடவடிக்கைகள் வழமைபோல முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார். கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரி இன்று முற்பகல் 8 மணி தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மிருகக்காட்சி சாலைகள் சங்க ஒன்றியத்தின் செயலாளர் பிரியந்த விக்ரமசிங்க குறிப்பிட்டார். இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு மிருகக்காட்சி சாலைகளின் அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். மிருகக்காட்சி சாலைகளை பார்வையிட நாளொன்றுக்கு சுமார் 4000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். நாளாந்தம் 15 இலட்சத்திற்கும் அதிக வருமானம் ஈட்டப்படுகிறது. இந்த நிலையில், பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பில் துறைசார் அமைச்சுடன் கலந்துரையாடுவதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிகா மல்சிங்க கூறினார்.