மட்டக்களப்பு சிறையில் உயிரிழந்தவரின் மரணத்தில் உறவினர்கள் சந்தேகம்

மட்டக்களப்பு சிறையில் உயிரிழந்தவரின் மரணத்தில் உறவினர்கள் சந்தேகம்

எழுத்தாளர் Staff Writer

06 Sep, 2019 | 7:36 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு சிறையில் உயிரிழந்த தேவதாஸ் கமல்ராஜின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு – சுங்கான்கேணியை சேர்ந்த தேவதாஸ் கமல்ராஜ் மோதல் ஒன்று தொடர்பில் தேடப்பட்டு வந்த நிலையில், கடந்த 4 ஆம் திகதி சட்டத்தரணியூடாக வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

25,000 ரூபா ரொக்கப்பிணையில் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டபோதிலும் அதனை செலுத்தாமையால் கடந்த 4 ஆம் திகதி மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார்.

விளக்கமறியலில் அவருக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டமையால், சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகர தெரிவித்தார்.

அதனையடுத்து, நேற்று அதிகாலை 12.45 மணியளவில் மயக்கமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் அதிகாலை 3 மணியளவில் அவர் உயிரிழந்ததாகவும் எஸ்.எல்.விஜயசேகர குறிப்பிட்டார்.

பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உயிரிழந்தமைக்கான காரணத்தினை கண்டறிந்துகொள்ள முடியும் என மட்டக்களப்பு சிறைசாலை அத்தியட்சகர் கூறினார்.

எனினும், உயிரிழந்த நிலையிலேயே கடந்த 5 ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அவர் கொண்டுவரப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சனி கணேசலிங்கம் தெரிவித்தார்.

இந்நிலையில், தேவதாஸ் கமல்ராஜின் மரணத்தில் தமக்கு சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்