ஈரானுடன் பண்டமாற்று உடன்படிக்கையில் கைச்சாத்திட அரசு தீர்மானம்

ஈரானுடன் பண்டமாற்று உடன்படிக்கையில் கைச்சாத்திட அரசு தீர்மானம்

ஈரானுடன் பண்டமாற்று உடன்படிக்கையில் கைச்சாத்திட அரசு தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2019 | 10:33 am

Colombo (News 1st) ஈரானுடன் பண்டமாற்று உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஈரானிடமிருந்து கொள்வனவு செய்த எரிபொருளுக்கான கொடுப்பனவிற்குப் பதிலாக, அந்நாட்டிற்கு தேயிலை ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் J.A. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கொள்வனவு செய்த எரிபொருளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், சுமார் 250 மில்லியன் டொலர் கொடுப்பனவை ஈரானுக்கு செலுத்த வேண்டும்.

எனினும், ஈரான் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளதால், அந்நாட்டின் வங்கிகளுடன் டொலரை பயன்படுத்தி கொடுக்கல் வாங்கலில் ஈடுபட முடியாதுள்ளது.

புதிய யோசனைக்கு அமைய, நாட்டின் பிரதான தேயிலை கொள்வனவாளரான ஈரானுக்கு கட்டணங்களை அறவிடாது தேயிலை ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

2 வருடங்களுக்கு இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் குறித்த யோசனைத் திட்டம், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்காக கிடைக்கவேண்டிய பணத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை தேயிலை சபைக்கு வழங்கவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்