பூஜித் ஜயசுந்தர தரப்பிற்கு நீதிமன்றின் உத்தரவு

திருத்தப்பட்ட சத்தியக்கடதாசியை சமர்ப்பிக்கும் இயலுமை தொடர்பில் அறிவிக்குமாறு பூஜித் ஜயசுந்தர தரப்பிற்கு உத்தரவு

by Staff Writer 05-09-2019 | 8:44 PM
Colombo (News 1st) பூஜித் ஜயசுந்தர நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சத்தியக்கடதாசியை திருத்தி, திருத்தப்பட்ட சத்தியக்கடதாசியை மீண்டும் சமர்ப்பிப்பதற்கான இயலுமை தொடர்பில் எதிர்வரும் 25 ஆம் திகதி மன்றுக்கு அறிவிக்குமாறு பூஜித் ஜயசுந்தர சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி விரான் கொரேயாவிற்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதலைத் தடுக்காமைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்ட மா அதிபரினால் நேற்று (04) திறந்த நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது போன்று பூஜித் ஜயசுந்தரவினால் சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக்கடதாசியில் பொருத்தமற்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததால், தமது தரப்பினருடம் கலந்துரையாடி திருத்தப்பட்ட சத்தியக்கடதாசியொன்றை முன்வைக்க எதிர்பார்ப்பதாக சட்டத்தரணி விரான் கொரேயா தெரிவித்துள்ளார். மனுக்கள் மீண்டும் எதிர்வரும் 25 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னர் ஏப்ரல் 16 ஆம் திகதி நடத்தப்படவிருந்த பாதுகாப்பு சபை கூட்டம் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவினால் இரத்து செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. வௌிநாட்டு விஜயமொன்று காரணமாக பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கூட்டத்தை இரத்து செய்ததாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இன்று மன்றில் தெரிவித்தார். ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படக்கூடும் என ஏப்ரல் 20 ஆம் திகதியும் புலனாய்வுத் தகவல் வழங்கப்பட்டிருந்தாலும், தாக்குதலைத் தடுக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என நீதியரசர் குழாம் இதன்போது வினவியது. புலனாய்வுத் தகவல்கள் எதுவும் தமது தரப்பிற்கு முறையாக அறிவிக்கப்படவில்லையெனவும் ஹேமசிறி பெர்னாண்டோ சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன இதன்போது பதிலளித்தார். பெயரளவில் பாதுகாப்பு செயலாளர் என்றாலும் அவருக்கு விவசாய அமைச்சின் செயலாளருக்கு இருக்கக்கூடிய அதிகாரமேனும் வழங்கப்பட்டிருக்கவில்லையென ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன இதன்போது மன்றில் தெரிவித்தார். அவ்வாறான சூழலில் தாக்குதலை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காமைக்கான பொறுப்பை ஹேமசிறி பெர்னாண்டோ மீது சுமத்த முடியாது என தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி அந்த பொறுப்பை அரசாங்கம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளதாக புலப்படுவதாக மன்றில் தெரிவித்தார். மேலும், எந்த புலனாய்வுத் தகவல் கிடைக்கப்பெற்றாலும், அது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பாதுகாப்பு செயலாளராக கடமை புரிந்த ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு இருக்கவில்லையெனவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன கூறினார்.