SLC பெயரில் வெளிநாடுகளில் வங்கிக் கணக்குகள் 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பெயரில் வெளிநாடுகளில் வங்கிக் கணக்குகள் இருப்பது உறுதியானது

by Staff Writer 05-09-2019 | 9:11 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா கிரிக்கெட் எனும் பெயரில் வெளிநாடுகளில் வங்கிக் கணக்குகள் நடைமுறையில் இருப்பதாகவும் அதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவன செயலாளர் மொஹான் டி சில்வா கோப் குழு (COPE) முன்னிலையில் ஏற்றுக்கொண்டார். ஶ்ரீ லங்கா கிரிக்கெட் எனும் பெயரில் வெளிநாடுகளில் வங்கிக் கணக்குகள் இருப்பதாக ஆரம்பம் முதலே நியூஸ்ஃபெஸ்ட் தெரிவித்து வருகிறது. Banamex வங்கிக் கணக்கு, BBVA compass வங்கிக் கணக்கு, அமெரிக்க டொலர் கொடுக்கல் வாங்கலுக்காக ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் என்பன அவற்றில் பிரதானமாகும். Banamex வங்கியின் டொலர் கொடுக்கல் வாங்கலுக்காக நடைமுறைப்படுத்தப்படும் கணக்கின் முகவரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முகவரி என்பதையும் நியூஸ்ஃபெஸ்ட் உறுதிப்படுத்தியிருந்தது. தென் ஆபிரிக்க விஜயத்திற்காக இலங்கைக்கு கிடைக்கவிருந்த இரண்டாம் கட்ட கொடுப்பனவான 436,541 அமெரிக்க டொலர் பணத்தை வேறு வங்கிக் கணக்கிற்கு அனுப்ப முயற்சிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வில் தகவல் வெளியானது. அதனை Wales Fargo எனும் பெயருடைய வங்கிக் கணக்கிற்கு அனுப்புமாறு 2018 ஜூலை 12 ஆம் திகதி நிதிப்பிரிவு தலைவர் சோனி நிறுவனத்தின் சந்தீப் பட்டேலுக்கு அனுப்பிய மின்னஞ்சல் தகவலில் தெரிவித்துள்ளார். குறித்த வங்கியின் கணக்குகளை இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் வழங்கத் தவறியுள்ளதாக கணக்காய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Wales Fargo வங்கிக் கணக்கின் உரிமையாளராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பெயரிடப்பட்டிருப்பதை முதலாவதாக நியூஸ்ஃபெஸ்ட்டே வெளிக்கொணர்ந்தது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பெயரில் வெளிநாடுகளில் 4 வங்கிக் கணக்குகள் உள்ளன. இறுதியில் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கு வெளிநாடுகளில் வங்கிக் கணக்குகள் இருப்பதாக கோப் குழு முன்னிலையில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் எதற்காக இதனை செய்தார்கள் என்பதை அவர்களே சிந்தித்துப் பார்க்க வேண்டும். நன்மைக்காக அவர்கள் இதனை செய்திருந்தால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருக்காது என்பதை புதிதாகக் கூற வேண்டியதில்லை.