வட மாகாண சுகாதாரத் தொண்டர்களின் எதிர்ப்பினால் 454 பேரின் நியமனம் இடைநிறுத்தம்

வட மாகாண சுகாதாரத் தொண்டர்களின் எதிர்ப்பினால் 454 பேரின் நியமனம் இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

05 Sep, 2019 | 7:33 pm

Colombo (News 1st) வட மாகாண சுகாதாரத் தொண்டர்களின் எதிர்ப்பு நடவடிக்கையால் சாவகச்சேரியில் இன்று நடைபெறவிருந்த சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வட மாகாண சுகாதார தொண்டர்கள் 454 பேருக்கு இன்று காலை சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்தில் நியமனங்கள் வழங்கப்படவிருந்தன.

இந்த நியமனத்தில் ஏற்கனவே சுகாதாரத் தொண்டர்களாக தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்தவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து நேற்று (04) முதல் சுகாதாரத் தொண்டர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை நிகழ்வு நடைபெறவிருந்த பொன்விழா மண்டபத்தின் நுழைவாயில்களை மறித்து அவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மண்டபத்தை முற்றுகையிட்டதால், நியமனம் பெற வந்தவர்கள் மண்டபத்திற்குள் பிரவேசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

எதிர்ப்பில் ஈடுபட்டவர்களை சந்திப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வருகை தந்த சந்தர்ப்பத்தில் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

நியமனம் பெற வந்தவர்கள் அருகில் உள்ள வங்கியொன்றின் நுழைவாயில் ஊடாக மண்டபத்திற்குள் அழைக்கப்பட்டனர்.

எதிர்ப்பில் ஈடுபட்ட சுகாதாரத் தொண்டர்களுடன் வட மாகாண சுகாதார பணிமனை செயலாளர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்த நிலையில், இன்றைய நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெறவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்