தட்டம்மையை ஒழித்த நாடாக இலங்கைக்கு சான்றிதழ்

தட்டம்மை நோயை ஒழித்த நாடாக இலங்கைக்கு சான்றிதழ்

by Staff Writer 05-09-2019 | 10:22 AM
Colombo (News 1st) தட்டம்மை நோயை முழுமையாக ஒழித்த நாடாகப் பிரகடனப்படுத்தும் சான்றிதழை உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெற்காசிய வலயத்திற்கான பணிப்பாளர், டொக்டர் பூனம் கேத்ராபல் சிங் இந்தச் சான்றிதழை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நடைபெறும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெற்காசிய வலயத்திற்கான 72ஆவது மாநாட்டிலேயே இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, தட்டம்மை நோயை முற்றாக ஒழித்த 5ஆவது தெற்காசிய நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தின் கீழ், 2014 ஆம் ஆண்டு முதல் நாட்டில் தட்டம்மை நோயைக் கட்டுப்படுத்துவதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் 2016 ஆம் ஆண்டிலேயே இறுதியாக தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.