ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் நிரோஷன் திக்வெல்ல

நியூஸிலாந்துடனான போட்டியில் தோல்வி; ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் நிரோஷன் திக்வெல்ல

by Staff Writer 04-09-2019 | 1:34 PM
Colombo (News 1st) நியூஸிலாந்துக்கு எதிரான முதலிரண்டு சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலும் தோல்வியடைந்தமை தொடர்பில் ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்ல தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டிக்கு பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். 10 முதல் 12 ஓட்டங்கள் வரை நாம் குறைவாகவே பெற்றபோதிலும் பவர் ப்ளே ஓவரில் 50 ஓட்டங்களை வழங்கினாலும் தாம் 3 விக்கெட்களை கைப்பற்றியதாகவும் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கைநழுவிப்போனதாகவும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல தெரிவித்துள்ளார். களத்தடுப்பில் விடப்பட்ட சில தவறுகளே தோல்விக்கான பிரதான காரணமாக அமைந்தது. அணியில் விளையாடுகின்ற 11 பேரும் போட்டியில் வெற்றி பெறுவதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என திக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். 2 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியபோதிலும் இறுதி 2 ஓவர்களில் தோல்வியடைந்தமை தொடர்பில் கவலையடைவதாகக் கூறியுள்ளார். இதேவேளை, உண்மையில் மைதானத்தில் நேற்று கூடிய ரசிகர்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர்களுக்கு நன்றி கூறவதாகவும் தெரிவித்துள்ளார். எல்லா போட்டிகளிலும் வெற்றியீட்டவே தாமும் எதிர்பார்ப்பதாகவும் தோல்வியடைவதற்காக போட்டிகளில் விளையாடுவதில்லை எனவும் விளையாடுகின்ற வீரர் ஒருவருக்கே அது எவ்வளவு சிரமமானது என்பது புரியும் எனவும் திக்வெல்ல மேலும் கூறியுள்ளார். அத்துடன், தாம் விளையாடுவதை 22 மில்லியன் பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறிய திக்வெல்ல, கிரிக்கெட்டில் தமக்கென இருக்கின்ற பொறுப்பின் மூலமாகவே இவ்வளவு தூரத்துக்கு சென்றுள்ளதாகவும் அதனை முன்னோக்கிக் கொண்டுசெல்வதாகவும் கூறியுள்ளார். இறுதியில், 2 போட்டிகளிலும் தோல்வியடைந்தமை குறித்து இந்த சந்தர்ப்பத்தில் சகல ரசிகர்களிடமும் தான் மன்னிப்பு கோருவதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறானதொரு சிறிய தவறும் ஏற்படாது என தெரிவிப்பதாகவும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல தெரிவித்துள்ளார்.