ஊழல் மோசடி தொடர்பில் 2000க்கும் அதிக முறைப்பாடுகள்

ஊழல் சம்பவங்கள் தொடர்பில் 8 மாதங்களில் 2000க்கும் அதிக முறைப்பாடுகள்

by Staff Writer 04-09-2019 | 12:05 PM
Colombo (News 1st) வருடத்தின் கடந்த 8 மாதங்களில் ஊழல் மோசடி சம்பவங்கள் தொடர்பில் 2096 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் 1276 முறைப்பாடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இலஞ்சம் பெற்றமை தொடர்பில் 227 முறைப்பாடுகளும் மோசடிகள் தொடர்பில் 873 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, முறையற்ற வகையில் சொத்துக்களை சேகரித்தமை தொடர்பில் 86 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. ஊழல் மோசடிகள் தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, 43 சந்தர்ப்பங்களில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இதன்போது 27 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார். அதிபர்கள், ​பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அடங்களாக அரச அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.