இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து

இருபதுக்கு 20 தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து அணி

by Staff Writer 04-09-2019 | 7:25 AM
Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 தொடரை நியூஸிலாந்து அணி, ஒரு போட்டி எஞ்சிய நிலையில் கைப்பற்றியுள்ளது. இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் நியூஸிலாந்து 4 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது. கண்டி - பல்லேகலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 40 ஓட்டங்களுக்கு முதலிரண்டு விக்கெட்களையும் இழந்தது. குசல் மெண்டிஸ் 26 ஓட்டங்களுடனும் குசல் ஜனித் பெரேரா 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். நிரோஷன் திக்வெல்ல, அவிஷ்க பெர்னாண்டோ ஜோடி மூன்றாம் விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்தது. நிரோஷன் திக்வெல்ல 39 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்னாண்டோ 37 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்களைப் பெற்றது. செத் ரான்ஸ் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். வெற்றி இலக்கான 162 ஓட்டங்களை நோக்கிப் பதிலளித்தாட களமிறங்கிய நியூஸிலாந்தும் ஆரம்பத்தில் விக்கெட்களை இழந்து பின்னடைவுக்குள்ளானது. முதல் 3 விக்கெட்களும் 38 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட நிலையில் இலங்கை அணிக்கு வெற்றி மீதான நம்பிக்கை உருவானது. எனினும், கொலின் டி கிரேண்ட்ஹோம் மற்றும் டொம் புருஸின் அதிரடி துடுப்பாட்டம் வெற்றியை, நியூஸிலாந்தின் பக்கம் திருப்பியது. இவர்கள் இருவரும் நான்காம் விக்கெட்காக 109 ஓட்டங்களை பகிர்ந்தனர். இது இலங்கை அணிக்கு எதிராக நியூஸிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் நான்காம் விக்கெட்டில் பகிர்ந்த அதிகூடிய இணைப்பாட்டமாகும். கொலின் டி கிரேண்ட்ஹோம் 3 சிக்ஸர்களுடன் 46 பந்துகளில் 59 ஓட்டங்களை விளாசினார். இறுதி ஓவரில் நியூஸிலாந்தின் வெற்றிக்கு 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய வனிந்து ஹசரங்க முதலிரண்டு பந்துகளிலும் அடுத்தடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி வெற்றி மீதான நம்பிக்கையை உருவாக்கினார். டொம் புரூஸ் 46 பந்துகளில் 53 ஓட்டங்களுடன் வெளியேறினார். இறுதி ஓவரின் மூன்றாவது பந்தில் மிச்செல் சான்ட்னர் விளாசிய பந்தை பிடியெடுப்பதற்கு முயற்சித்த ஷெஹான் ஜெயசூரிய மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் ஒருவரை ஒருவர் மோதிக் கொண்டனர். உபாதைக்குள்ளாகிய நிலையில் அவர்கள் இருவரும் மைதானத்தை விட்டு வெளியேற அது சிக்ஸர் என நடுவர் அறிவித்தார். நான்காவது பந்தில் மீண்டும் பவுன்டரியொன்றை விளாசிய மிச்செல் சான்ட்னர் நியூஸிலாந்துக்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்துள்ளார்.