பூஜித் ஜயசுந்தரவின் சத்தியக்கடதாசியை நீக்குமாறு சட்ட மா அதிபர் கோரிக்கை

பூஜித் ஜயசுந்தரவின் சத்தியக்கடதாசியை நீக்குமாறு சட்ட மா அதிபர் கோரிக்கை

பூஜித் ஜயசுந்தரவின் சத்தியக்கடதாசியை நீக்குமாறு சட்ட மா அதிபர் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

04 Sep, 2019 | 7:09 pm

Colombo (News 1st) கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள சத்தியக்கடதாசியை நீக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பகைமை உணர்வுடன் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் தமக்கெதிராக சுமத்தப்பட்டுள்ளதாக பூஜித் ஜயசுந்தர குறித்த சத்தியக்கடதாசியில் குறிப்பிட்டுள்ளதாக சட்ட மா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி, அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன மற்றும் நெருங்கிய அரசியல் தொடர்புகளைக் கொண்ட சிலருடன் இணைந்து பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு தாம் சூழ்ச்சி செய்வதாக ஜூலை 17 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட குறித்த சத்தியக்கடதாசியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அரசின் பிரதான சட்ட அதிகாரியான தமது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா அறிவித்துள்ளார்.

இந்த சத்தியகடதாசியின் மூலம் பிரதிவாதி நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழில் தர்மம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளை மீறி பிரதிவாதி பாரிய தவறிழைத்துள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள சட்ட மா அதிபர், சட்டத்தரணி விரான் கொரேயாவிற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

குறித்த சத்தியக்கடதாசியில் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்குவதற்கு முயற்சித்துள்ளதாகவும், அதற்கு இடமளிக்க வேண்டாமெனவும் சட்ட மா அதிபர் பிரதம நீதியரசர் தலைமையிலான எழுவர் கொண்ட நீதியரசர் குழாமிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்ட எந்த அரசியல்வாதியிடமும் தாம் கலந்துரையாடவில்லையெனவும் அதற்கான அவசியம் காணப்படவில்லையெனவும் சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம் வழக்கு விசாரணையை சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்து மன்றில் இருந்து வௌியேறியதுடன் 30 நிமிடத்தின் பின்னர் மீண்டும் வருகை தந்தனர்.

இன்று வாய்வழி மூலமாக முன்வைக்கப்பட்ட விடயங்களை நாளை காலை 10.30 க்கு முன்னர் எழுத்து மூல சமர்ப்பணமாக மன்றில் முன்வைக்குமாறு இதன்போது எழுவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் சட்ட மா அதிபருக்கு அறிவித்துள்ளது.

குறித்த எழுத்துமூல சமர்ப்பணத்தை ஆராய்ந்ததன் பின்னர் சத்தியக்கடதாசியை நீக்குவதா, இல்லையா என்பது தொடர்பிலான தீர்ப்பு நாளை (05) அறிவிக்கப்படும் என நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்