ஆரம்பமும் முடிவும் இன்றி நிர்மாணிக்கப்படும் மத்திய அதிவேக வீதி

ஆரம்பமும் முடிவும் இன்றி நிர்மாணிக்கப்படும் மத்திய அதிவேக வீதி

ஆரம்பமும் முடிவும் இன்றி நிர்மாணிக்கப்படும் மத்திய அதிவேக வீதி

எழுத்தாளர் Staff Writer

04 Sep, 2019 | 9:29 pm

Colombo (News 1st) மத்திய அதிவேக வீதியின் முதலாம் மற்றும் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடவத்தையிலிருந்து குருநாகல் மற்றும் கலகெதர வரையிலான அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை மூன்று கட்டங்களில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது.

மத்திய அதிவேக வீதிக்காக 2773 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடுவதற்கும் எதிர்பார்க்கப்பட்டது.

மத்திய அதிவேக வீதியின் கடவத்தையிலிருந்து மீரிகம வரையிலான முதலாவது கட்ட நிர்மாணப் பணிகளை சீனாவிற்கு வழங்க, இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டிற்கமைய தீர்மானிக்கப்பட்டது.

எனினும், இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் எதிர்பார்க்கப்பட்ட கடன் தொகை இதுவரை கிடைக்கவில்லை.

ஒரு பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்திருந்த போதிலும், அதனை பெற்றுக்கொள்வதற்கு முன்னர் 15 வீத அடிப்படைத் தொகையை செலுத்த வேண்டிய நிலை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.

முதலாம் கட்ட நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் தாமதமாகும் நிலையில், மத்திய அதிவேக விதியின் நான்காம் கட்டத்தை சீன நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதேவேளை, மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள், உள்நாட்டு வங்கிகளில் கடன் பெற்று, பல உள்நாட்டு நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான இந்தப் பகுதியின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள போதிலும் அதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

பொத்துஹெர வெளியேறும் பகுதியின் நிர்மாணப் பணிகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினையே அதற்குக் காரணமாகும்.

வெளியேறும் பகுதியின் மூன்றாம் கட்டத்தை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் Taisei நிறுவனத்திற்குரியது என்பதுடன், அந்தக் கட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படாமையால் இரண்டாம் கட்டத்தை பூர்த்தி செய்தாலும் அதிவேக வீதியிலிருந்து வெளியேறுவதற்கான பகுதி நிர்மாணிக்கப்பட மாட்டாது.

இதற்கமைய, ஒப்பந்த நிறுவனத்தின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு அந்த வெளியேறும் பகுதியை இரண்டாம் கட்டத்தின் கீழ் கொண்டுவர அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

பொத்துகஹெர வெளியேறும் பகுதியை மூன்றாம் கட்டத்திலிருந்து நீக்கி, இலங்கை அரசாங்கத்தின் கீழ் அதனைக் கொண்டுவந்தால், திட்டத்திலிருந்து தாம் விலகுவதாக ஜப்பானின் Taisei நிறுவனம் எச்சரிக்கை விடுத்ததுடன், அது சமரசப்படுத்தப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை இன்று குறிப்பிட்டது.

எனினும், மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்டத்தின் நிர்மாணப் பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை.

கடன் உடன்படிக்கையில் நிலவும் பிரச்சினையே இதற்கு அடிப்படைக் காரணம் என வீதி அபிவிருத்தி அதிகார சபை கூறுகின்றது.

இதற்கமைய, மத்திய அதிவேக வீதியில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் வெறுமனே 38 கிலோமீட்டர் பகுதி மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மத்திய அதிவேக வீதி, லக்ஷ்மன் கிரியெல்ல பெருந்தெருக்கள் அமைச்சராகப் பதவி வகித்தபோது ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.

நாட்டு மக்களின் பணமே அரச வங்கிகளில் உள்ளது.

உரிய பிரதிபலன் தொடர்பிலான மதிப்பீட்டின் பின்னரே, மக்களின் பணத்தை இவ்வாறான திட்டங்களுக்காக முதலீடு செய்ய வேண்டும்.

மத்திய அதிவேக வீதியில் எதிர்பார்க்கப்பட்ட பிரதிபலனைப் பெறுவதாயின், வீதியை முழுமையாக நிர்மாணிக்க வேண்டும்.

பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட வீதியூடாக, எதிர்பார்க்கப்பட்ட பிரதிபலன் கிடைக்காமை நாட்டு மக்களின் பணத்தை வீண் விரயமாக்கும் செயற்பாடல்லவா?

மக்களின் பணத்தில் அருங்காட்சியகத்தை நிர்மாணித்து அனுகூலம் பெற்றதாக கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராக மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறாயின், உண்மையான பயனாளிகள் இன்றி மக்களின் பணத்தை வீண் விரயமாக்கி, தனிப்பட்ட அனுகூலம் பெறும் மத்திய அதிவேக வீதித் திட்டத்தின் பிரதான சூத்திதாரிகள், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியது அவசியமானதல்லவா?


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்