மத்திய வங்கி கொள்ளைக்கு பொறுப்பானவர்கள் இலங்கை அரசியலில் இருந்து விலக வேண்டும்: ஜனாதிபதி

by Staff Writer 03-09-2019 | 7:10 PM
Colombo (News 1st) மத்திய வங்கி கொள்ளைக்கு பொறுப்பானவர்கள் இலங்கை அரசியலில் இருந்து விலக வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது வருடாந்த மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அர்ஜூன மகேந்திரனை விட பெரிய அதிகாரியொருவர் கூண்டிற்குள் செல்வதற்குத் தேவையான கோவைகள் தயாராக இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கான கோவைகள் தயாராகியுள்ளதாகவும் அதற்கான சட்டரீதியிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் அதிலிருந்து எவராலும் தப்ப முடியாது எனவும் அவர் கூறினார். முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கான செயற்பாடுகள் துரிதகதியில் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மாகாண சபை முறைமையும் மாகாண சபை தேர்தலும் முடக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கான முழு பொறுப்பையும் பிரதமரே ஏற்கவேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்திக் கூறினார். அடுத்த ஜனாதிபதி யார் என்பதை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே தீர்மானிக்கும் எனவும் அவர் கூறினார். 19 ஆம் திருத்தத்திற்கு அமைய அடுத்த பிரதமரே அதிகாரம் மிக்கவராய் காணப்படுவார் என்பதால், அடுத்த ஜனாதிபதி யார் என்பதை விட அடுத்த பிரதமர் தொடர்பிலேயே கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.