by Bella Dalima 03-09-2019 | 4:43 PM
சீனாவில் பாடசாலை திறந்த முதல் நாளிலேயே 8 ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள என்ஷி நகரில் கெயாங்போ ஆரம்பப் பாடசாலை உள்ளது. இந்தப் பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு திங்களன்றுதான் (02) வகுப்புகள் ஆரம்பமாகின.
இந்நிலையில், கெயாங்போ பாடசாலை திறந்த முதல் நாளிலேயே 8 ஆரம்பப் பாடசாலை மாணவர்களை ஒருவர் குத்திக் கொன்ற சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
40 வயதுடைய அந்நபர் பாடசாலைக்குள் புகுந்து தன் கையில் வைத்திருந்த கத்தியால் மாணவர்களை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் 8 மாணவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் 2 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் உடனடியாக விரைந்து சென்று அந்நபரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சமூகத்தின் மீது ஏற்பட்ட கோபத்தால் இவ்வாறு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள அந்நபர், ஏற்கனவே தனது காதலியின் கண்ணை கத்தியால் தோண்ட முயன்ற குற்றத்திற்காக 8 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.