பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் 97 தடவைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் 97 தடவைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2019 | 7:50 pm

Colombo (News 1st) மொஹம்மட் சஹ்ரான் தலைமையிலான கடும்போக்குவாதிகள் இலங்கையின் முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதற்கான அபாயம் உள்ளதாக கடந்த சில வருடங்களில் 97 தடவைகள் தேசிய புலனாய்வுப் பிரிவு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு எச்சரிக்கை அறிவித்தல்களை விடுத்திருந்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ஜயவர்தன இன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் 97 தடவைகள் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை, அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சத்தியக்கடதாசி மற்றும் ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பிலான பொறுப்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் ஏனைய பாதுகாப்பு பிரிவினருக்கு மாத்திரமல்லாது அமைச்சரவைக்கும் உள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய, நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அமைச்சரவைக்கு கூட்டுப்பொறுப்பு உள்ளதாகவும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ஜயவர்தன உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து தப்பிக்க அரசாங்கத்திற்கு ஒருநாளும் இயலாது என தெரிவித்த சட்டத்தரணி நுவன் போப்பகே, ஒவ்வொரு வருடமும் வரவு செலவு திட்டத்தில் அதிகத் தொகை பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்படுவதன் நோக்கம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே ஒழிய வேறு விடயங்கள் அல்லவென வலியுறுத்தியுள்ளார்.

தாக்குதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக எந்த தரப்பினரும் தமக்கு அறிவிக்கவில்லையென்றோ அல்லது தாம் பாதுகாப்பு சபைக்கு அழைக்கப்படவில்லை என தெரிவித்து, தாக்குதல்களை தடுப்பதற்கான பொறுப்பு மற்றும் நாட்டு மக்களை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்து பாதுகாப்பு தரப்பின் எந்த அதிகாரியும் அல்லது ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க செயலாளர் உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர் எவராலும் தப்பிக்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர சில்வா இதன்போது மன்றில் தெரிவித்துள்ளார்.

தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு எந்த அதிகாரியிடமும் சென்று கோரும் அவசியம் தமக்கில்லையென இதன்போது தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி பொதுமக்கள் தமது வாக்குகளை வழங்கி பதவிகளுக்கு நியமித்தவர்கள் நாட்டின் வரி வருமானத்தில் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டு தமக்கு ஒன்றும் தெரியாது என கூறி பொறுப்பிலிருந்து விடுபட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தர, பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களையும் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை மனுக்கள் தொடர்பில் சட்டத்தரணிகளின் விளக்கம் இன்று முடிவுக்கு வந்தது.

சட்டமா அதிபர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வாதங்கள் நாளை காலை ஆரம்பிக்கப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்