இலங்கை - நியூஸிலாந்து 20 க்கு 20 தொடர் இன்று

இலங்கை - நியூஸிலாந்து இடையிலான 20 க்கு 20 தொடர் இன்று ஆரம்பம்

by Staff Writer 01-09-2019 | 3:10 PM
Colombo (News 1st) இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடர் இன்று (01) ஆரம்பமாகவுள்ளது. தொடரின் முதல் போட்டி கண்டி - பல்லேகல மைதானத்தில் இன்று இரவு 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க வேண்டிய கட்டாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இந்தியா பெற்ற 416 ஓட்டங்களுக்கு முதல் இன்னிங்ஸில் பதிலளித்தாடும் மேற்கிந்தியத்தீவுகள் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 87 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. கிங்ஸ்டனில் நடைபெறும் போட்டியில் 5 விக்கெட் இழப்புக்கு 264 ஓட்டங்களுடன் இந்தியா இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது. 42 ஓட்டங்களுடன் களமிறங்கிய அனுமா விஹாரி டெஸ்ட் அரங்கில் கன்னி சதத்தை எட்டிய நிலையில் 111 ஓட்டங்களைப் பெற்றார். வேகப்பந்து வீச்சாளரான இசாந்த ஷர்மா அரைச்சதம் கடந்த நிலையில் 57 ஓட்டங்களை பெற்றார். இவர்கள் இருவரும் எட்டாவது விக்கெட்காக 112 ஓட்டங்களை பகிர்ந்தனர். இந்தியா முதல் இன்னிங்ஸில் 416 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுகள் தடுமாற்றமான ஆரம்பத்தை பெற்றது. முதல் 7 விக்கெட்களும் 78 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட நிலையில் மேற்கிந்தியத்தீவுகளின் துடுப்பாட்டம் பரிதாப நிலையை அடைந்தது. சொலமன் ஹெட்மியர் 34 ஓட்டங்களை பெற்று ஆறுதல் அளித்தார். அபாரமாக பந்துவீசிய ஜெஸ்ப்ரீட் பும்ரா 16 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்போது அவர் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தியதோடு, டெஸ்ட் அரங்கில் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இந்திய பந்துவீச்சாளராக பதிவானார். இதற்கு முன்னர் இந்த இலக்கை ஹர்பஜன் சிங்கும் இர்பான் பதானும் எட்டியிருந்தனர். டெஸ்ட் அரங்கில் ஜெஸ்ப்ரீட் பும்ராவின் அதிசிறந்த பந்துவீச்சு பெறுதியும் இதுவாக பதிவாகியுள்ளது. மேற்கிந்தியத்தீவுகள் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க கைவசம் 3 விக்கெட்கள் எஞ்சியுள்ள நிலையில் மேலும் 329 ஓட்டங்களை பெற வேண்டியுள்ளது. போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஓர் அங்கமாக இந்தத் தொடர் நடத்தப்படுகிறது.